மீண்டும் சூடுபிடிக்கும் கட்டுமானத்தொழில்

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை அடுத்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்து வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த இன்ரிதம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்கிறது.

மலேசியாவிலிருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு எம்.வி.அவ்ரெலியா என்ற கப்பல் நாளை சென்னை துறைமுகத்திற்கு வரவுள்ளது.

கொண்டுவரப்படும் மணலை ஓரிடத்தில் சேமித்துவைக்க துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை வலைத்தளத்தில்,  மணல் தேவை குறித்து நுகர்வோர் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அவ்வாறு பதிவுசெய்யப்படும் மணலை நேரடியாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்கே சென்று விநியோகம் செய்ய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் தேவைக்காக தனியார் முகவர்கள் யாரையும் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்றும், மணலின் விலை, விற்பனை செய்யப்படும் முறை குறித்த விவரங்கள் அனைத்தும் ஓரிரு நாளில் தமிழக பொதுப்பணித்துறை மூலம் அறிவிக்கப்படும் எனவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணல் தட்டுப்பாட்டை நீக்க, தமிழக அரசு தற்போது வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யும் நிலையில் தமிழகத்தில் முடங்கியுள்ள கட்டுமானப் பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version