விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவும், அதே தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சவேரி சோமாவுமே கொல்லப்பட்டவர்கள். தம்ப்ரிகுடா தாலுகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, லிவிரிபுட்டு என்ற இடத்தில், பெண் போராளிகள் உள்பட மாவோயிஸ்டுகள் சுமார் 60 பேர் காரை மறித்து சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இதில் எம்.எல்.ஏ. சர்வேஸ்வரராவும், முன்னாள் எம்.எல்.ஏ. சவேரி சோமாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிற்பகல் 12.15 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மாவோயிஸ்டுகள் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சிபிஐ மாவோயிஸ்ட் நிறுவன தினத்தை மாவோயிஸ்டுகள் கொண்டாடி வருகின்றனர். அதன் முக்கியத்தை உணர்த்தும் விதமாகவே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. நடமாட்டத்தை கண்காணித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். தங்களது எச்சரிக்கையை எம்.எல்.ஏ. நிராகரித்ததாக விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார். உயிரிழந்த சர்வேஸ்வரராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.