பெரும்பாலான இந்தியர்கள் மாதம் பத்தாயிரம் கூட சம்பாதிக்க இயலவில்லை என தெரிய வந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை-2018 எனும் தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவரும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இளைஞர்களிடையே வேலையின்மை அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நமது பொருளாளாதார வளர்ச்சி,வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியாக இருக்கிறது.
92 சதவீத ஆண் தொழிலாளர்கள், 82 சதவீத பெண் தொழிலாளர்கள் இன்னும் மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளேயே ஊதியம் பெறுகிறார்கள்.
இன்னும் 67 சதவீத வீடுகளில் மாத வருமானம் 10 ஆயிரத்துக்குள்ளாகவே இருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வைச் செய்த பேராசிரியர் அமித் பசோல் கூறுகையில், “ கடந்த 1970 கள் மற்றும் 1980களில் நீங்கள் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைச் சிறிது பின்னோக்கிப் பார்த்தால் பொருளாதார வளர்ச்சி 3 முதல் 4 சதவீதம் இருக்கும், அதற்கு ஈடாக வேலைவாய்ப்பில் வளர்ச்சி 2 சதவீதம் இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் பார்த்தால், நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியோடு ஒப்பிடும்போது, வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது 0.1 சதவீதமாக இருக்கிறது.
ஊதியத்தின் அடிப்படையைக் கணக்கிட்டால், அனைத்துத் துறைகளிலும் ஊதியத்தின் அளவு வளர்ந்திருந்தாலும், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கிராமப்புற மக்களின் ஊதியத்தின் அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் எதிர்பார்த்த அளவு கூலியோ, ஊதியமோ உயரவில்லை, பணிப்பாதுகாப்பு சூழலும் இல்லை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 100 ஆண்களுக்கு 20 பெண்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள், தமிழகத்தில் 100 ஆண்களுக்கு 50 பெண்களும், மிசோரம், நாகாலாந்தில் 70 பெண்களும் சம்பாதிக்கிறார்கள்.