மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது , குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதியளித்துள்ளது.
மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராம திலகம் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள, அரசு அதிகாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். இதை பின்பற்றுமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசாணையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.