புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் மொட்டையாண்டி கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை ,தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வாடிவாசல் வழியாக காளைகள் வரிசையாக சீறிப்பாய்ந்தன. தயாராக நின்ற மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமிலைபிடித்து அடக்க முயன்றனர்.இதில் பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தன.
இதை வாடிவாசலின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பிற்கு பின்னால் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்
போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு, மொபைல் போன், குத்துவிளக்கு, அண்டா, எவர்சில்வர் பாத்திரம், மற்றும் வேஷ்டி துண்டுகள் பரிசாக வழங்கப்பட்டது.