விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி திருநாள் நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், முதலமைச்சர் பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஓம் என்ற பிரணவ மந்திரத்தை திருவுருவமாய் கொண்டுள்ள விநாயகப் பெருமானின் அவதார திருநாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், அவருக்கு பிடித்தவற்றை படையலிட்டும், விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று முதலமைச்சர் வாழ்த்தி உள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளை ஒட்டி மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்வதாக அவர் கூறியுள்ளார்.