புழல் சிறை அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம்

புழல் மத்திய சிறை தலைமை வார்டன்கள் உட்பட சிறை அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து கடந்த 12ஆம் தேதி புழல் சிறையில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, டிஐஜி கனகராஜ் மற்றும் உயரதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது, கைதிகளின் அறையில் 18 டிவிக்கள், எப்எம் ரேடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து புழல் சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த முகமது ரபீக் கோவை சிறைக்கும், முகம்மது இப்ராஹீம் சேலம் சிறைக்கும் மாற்றப்பட்டனர். அதேபோன்று, முகம்மது ரியாஸ் பாளையங்கோட்டை சிறைக்கும், முகம்மது ஜாகீர் வேலூர் சிறைக்கும், ரபீக் திருச்சி சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி தரப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை வார்டன்கள் விஜயராஜ் மற்றும் கணேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதகை கிளை தலைமை வார்டனாக விஜயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கம் கிளை சிறை தலைமை வார்டனாக கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறை வார்டன்கள் பாவாடைராயர், ஜெபஸ்டின் செல்வகுமார், சிங்காரவேலன், சுப்ரமணி, பிரதாப் சிங், செல்வகுமார் ஆகியோர் வேலூர், கோவை, சேலம் மற்றும் திருச்சி சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை தலைவர் அசுதோஸ் பிறப்பித்துள்ளார்.

Exit mobile version