கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் முலம் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்க உள்ளதாகவும் இந்த திட்டத்திற்காக ஆண்டு தோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை காப்பீட்டு தொகை செலுத்தி 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான தொகையை 60 சதவீதம் மத்திய அரசும் மீதித் தொகையை மாநில அரசும் ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் தொடங்கி வைக்கும் இந்த திட்டம் வரும் 23 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.57 கோடி குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய அரசு திட்டத்துடன் முதலமைச்சரின் மருத்துவ திட்டத்தினையும் இணைத்து செயல் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் 5 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.