புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் – குடியரசுத் தலைவர் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதைய தலைமை நீதிபதி, தமக்கு அடுத்து பதவிக்கு வருபவரின் பெயரை பரிந்துரை செய்வது மரபு. அதன்படி நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை, தலைமை நீதிபதி அலுவலகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக பரிந்துரையை அனுப்பி வைத்தது. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோகாய், அக்டோபர் 3-ந் தேதி பதவியேற்கிறார். 2012-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வரும் கோகாய், தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் ஒருவர். இவரது தந்தை கேஷப் சந்திர கோகாய், காங்கிரஸ் சார்பில் அசாம் மாநில முதலமைச்சராக இருந்தவர்.

Exit mobile version