பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற 19 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள ரிவாரியைச் சேர்ந்த மாணவி சி.பி.எஸ்.சி தேர்வில் சாதனை படைத்ததால் பிரதமர் மோடி அவரை பாராட்டி இருந்தார்.
இதனையடுத்து குடியரசுத் தலைவரும் அந்த பெண்ணிற்கு விருது வழங்கி கவுரவித்தார். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த பெண், பயிற்சி மையத்திற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணை வயல் வெளிக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை மது அருந்துமாறு அந்த கும்பல் வற்புறுத்தியதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
கூட்டு பலாத்காரத்தால் அந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை பேருந்து நிறுத்தத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நேரம் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது அந்த குற்றம் எங்கு நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பின்னர் தொடர்புடைய காவல்நிலையத்திற்கு வழக்கை மாற்றும் முறை ஜீரோ எஃப். ஐ. ஆர். ஆகும்.