பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து சிறைத் துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவின்பேரில், சிறைக் கைதிகள் அடைக்கப்பட்ட “ஏ’ பிரிவில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 20 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகள் 5 பேர் தமிழகத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சேலம், கடலூர், கோவை ஆகிய மத்திய சிறைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கடலூர் மத்திய சிறையில் சிம் கார்டு மற்றும் செல்போன் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

Exit mobile version