பழவேற்காடு மற்றும் எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாதவரத்தில் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரியின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், முதலாம் ஆண்டு பி.டெக் வகுப்பை ஆரம்பித்து கல்லூரியை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உணவுத் துறை, அதிக வளர்ச்சி மற்றும் லாபம் கொண்ட துறையாக இருக்கிறது. அதனால் மாணவர்கள் இந்த துறையை கற்பதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றார்.
பழவேற்காடு மற்றும் எண்ணூர் கடல் பகுதியில், முகத்துவாரத்தில் ஏற்படும் மணல் திட்டால் மீனவர்கள் பாதிப்படைகிறார்கள் என்று கூறினார். உரிய அனுமதி பெற்று இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.