ஒரு இனத்தின், கலாச்சாரத்தின் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமானது மொழி. எண்ண பரிமாற்றம் என்பதைத் தாண்டி ஆயிரமாண்டு கால வரலாற்றின் தொன்மங்களை சுமந்து வரும் கண்ணுக்கு தெரியாத ஆவணம் தான் மொழி. அந்தவகையில் வட்டார வழக்குகள் இன்னும் கூர்மை பெற்று துலங்குபவையாகும்.
சென்னை, மதுரை, நெல்லை, குமரி, கோவை என 5 வட்டார வழக்குகள் தான் நம்மில் பெரும்பாலானோர் அறிந்துள்ளனர். ஆனால் தமிழில் 22-க்கும் மேற்பட்ட வட்டார வழக்குகள் இருப்பதாக எத்னோலாக் (ETHNOLOGUE) என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம் கூறுகிறது.
அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதுவதும், பேசுவதும் இருந்தாலென்ன? ஏன் தனியாக வட்டார வழக்குகள் இருக்க வேண்டும்? இந்த கேள்விகள் எழக்கூடும். தமிழ்நிலப்பரப்பை சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளாக பிரித்துள்ளனர். அதாவது ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் தக்க பண்பாடு பின்பற்றப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. இதுவே வட்டார வழக்கின் துவக்கமாக கொள்ளலாம்.
இன்று நாம் பேசக்கூடிய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து நம்மிடையே வந்து சேர்ந்துள்ளது என்றால் இதன் பண்பாட்டு தொடர்ச்சி என்பது மொழியால் சாத்தியப்பட்டுள்ளது. அந்த வகையில் வட்டார வழக்கு சொற்கள் அந்த மண்ணோடு இயைந்த வாழ்க்கை முறையை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தமிழில் வட்டார வழக்கு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கி.ராஜநாரயணன் தான். கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் பிறந்த அவர் கரிசல் நாட்டு வட்டார அகராதியை தொகுத்தவர். 1982-ல் ஆண்டு அன்னம் பதிப்பகம் இந்த அகராதியை வெளியிட்டது. இதன்பின்னர் கொங்கு வட்டார வழக்கு அகராதியை பெருமாள் முருகனும், கடலூர் வட்டார வழக்கு அகராதியை கண்மணி குணசேகரனும், நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு அகராதியை அ.கா.பெருமாளும், தஞ்சை வட்டார வழக்கு அகராதியை சுபாஷ் சந்திரபோசும், செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதியை பழனியப்பா சுப்ரமணியனும் உருவாக்கி உள்ளனர். இந்த அனைத்து அகராதிகளையுமே தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சென்னை வட்டார வழக்குக்கான அகராதியை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும். சாதாரண ஒரு சொல்லில் இருந்து சடங்கு, சம்பிரதாயம், வாழ்க்கை முறை போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுவதால், வட்டார வழக்கை வரலாற்றின் பூட்டை திறக்கப் பயன்படும் ஒரு திறவுகோல் என்றே சொல்லலாம்.