இலவச ஆடு வழங்கும் திட்டத்தில், விதியை மீறி தனது ஆதரவாளர்கள் பெயரை சேர்க்கச் சொல்லி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அரசு கால்நடை மருத்துவரை மிரட்டும் ஆடியோ வைரலாகி உள்ளது.
வாட்ஸ் அப்பில் உலா வரும் அந்த ஆடியோ சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கிறது. கீழ்பாடி கிராமத்தில் தனது ஆதரவாளரிடம், பட்டியல் வாங்கி ஆடு கொடுக்குமாறு அரசு கால்நடை மருத்துவரை, எம்.எல்.ஏ. மிரட்டுகிறார்.
யாருடைய தலையீடும் இல்லாமல், அனைத்து கட்சியினர் முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரைப்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக மருத்துவர் கூறுகிறார்.
அதை ஏற்க மறுக்கும் எம்.எல்.ஏ. தங்களது ஆட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று போராட உள்ளதாக மிரட்டும் தொனியில் சொல்கிறார். தாராளமாக போராடட்டும், பயனாளிகளை நேர்மையாக தேர்வு செய்துள்ளதால் எனக்கு கவலை இல்லை என மருத்துவர் பதிலளிக்கிறார்.
இதனால் எரிச்சலடையும் எம்.எல்.ஏ. நீ, வா, போ என ஒருமையில் பேசுவதுடன், அரசாங்கப் பணம் என்பது என் பணம் என்கிறார். 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எம்.எல்.ஏ. மிரட்டும் தொனியில் கூறியவுடன் கொந்தளிக்கும் மருத்துவர், அதை நிரூபித்தால் வேலையை விட்டுச் செல்வதுடன், உயிரைவிடவும் தயார் என்கிறார்.
நியாயமாக நடக்கும் அரசு மருத்துவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதே, தற்கொலைக்கு தூண்டும் விதமாக திமுக எம்.எல்.ஏ. மிரட்டுவது நியாயமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தத் திட்டங்களும் சரியாக அமல்படுத்தப்படாது, அவர்களுக்குத் தேவையானவர்கள் மட்டும்தான் பயன்பெறுவார்கள் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.