நம் காலைப் பொழுதுகளை அல்லது பக்தியின் தருணங்களை மேலும் அழகூட்டுபவை பாடல்கள். பல பாடல்களை நாமும் பாடியிருப்போம் குறைந்தபட்சம் கேட்டாவது இருப்போம். ஆனால் அந்த பாடலை இயற்றியது யார் என்று கேட்டால் தெரியாது என்பதுதான் நம்மில் பலரது பதிலாக இருக்கும். அப்படி புகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றையும், அந்த பாடல்களை எழுதியது யார் என்பதையும் இப்போது பார்ப்போம்…
பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் காலைப்பொழுது இந்த பாடல் இன்றி விடியாது. ஆம், கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா என்று எம்.எஸ்.சுப்புலஷ்மி பாடும் இந்த பாடல், திருமலை திருப்பதியின் திருப்பள்ளியெழுச்சியாக பாடப்படுகிறது. திருப்பதி மட்டுமல்ல, பல்வேறு கோயில்களிலும் இதுவே பள்ளியெழுச்சி பாடல். சிறுவர், சிறுமிகள் பலருக்கு இந்த பாடல் மனப்பாடமாக தெரியும். ஆனால் இந்த பாடலை எழுதியது யார் என்று கேட்டால் தெரியாது. 1361-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணன் என்பவர் தான் இந்த பாடலை இயற்றியது.
அடுத்ததாக வைணவக் கோயில்களின் முக்கியமான வழிபாட்டு பாடல் என்றால், ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் என்று துவங்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம். சஹஸ்ரம் என்றால் ஆயிரம், நாமம் என்றால் பெயர். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை வரிசைப்படுத்தும் இந்த பாடல் மகாபாரதத்தில் பீஷ்மர் அருளியதாக எழுதப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் வேதவியாசர் தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை எழுதியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பல லட்சம். அவர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தில் கேட்கும் பாடலாகவும், சபரிமலை நடை சாத்தப்படும் போது இசைக்கப்படும் பாடலாகவும் உள்ளது, ஹரிவராசனம் விஸ்வமோகனம் – ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் – அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் – ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே என்ற பாடல்… பாடகர் ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கப்படும் இந்த பாடலை எழுதியது யார் என்றால் சபரிமலைக்கு ஆண்டாண்டு காலமாக செல்பவர்களுக்கு கூட தெரியாது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு அருகே உள்ள கரந்தையார்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீகுளத்து ஐயர் என்பவர் தான் இந்த பாடலை எழுதியது.
கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத ஆத்திக இந்துக்கள் வீடுகளே இல்லையென்று கூறிவிடலாம். சஷ்டியை நோக்க சரவண பவனார், சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் என்ற பாடல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பாடலாக உலகநாடுகளில் ஒலிக்கிறது. இந்த பாடலை எழுதியது, வடசென்னையை அடுத்த வல்லூர் என்ற கிராமத்தில் 1837-ல் பிறந்த தேவராய சுவாமிகள். தீராத வயிற்றுவலியால் துடித்த அவர், திருச்செந்தூர் முருகனை நினைத்து கந்த சஷ்டி கவசத்தை எழுதினார்.
இவையெல்லாம் பக்தி பாடல்கள் என்ற பட்டியலில் வந்தாலும் ஒட்டுமொத்த தமிழர்களும் எழுந்து நின்று வணக்கம் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்தான நீராருங் கடலுடுத்த என்று துவங்கும் பாடல் நித்தம் நித்தம் பள்ளிகளில் இசைக்கப்படுகிறது. ஆனால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள் பலருக்கும் இந்த பாடலை யார் எழுதியது என்று கேட்டால் தெரியாது. பெ.சுந்தரம் பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் என்ற நாடகத்தில் இடம்பெற்றது இப்பாடல்.