தமிழ் இலக்கியத்தின் வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

தமிழின் நவீன இலக்கியத்திற்கு உயிர்கொடுத்த முக்கிய ஆளுமைகளில் முதன்மையானவர் சி.சு.செல்லப்பா. இன்று அவரது பிறந்தநாள். ஒட்டுமொத்த வாழ்வையே தமிழ் இலக்கியத்திற்காக அர்ப்பணித்த எளிமைமிகு மனிதரை அறிந்து கொள்வோம்…

1912-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தவர். சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பதன் சுருக்கமே சி.சு.செல்லப்பா. வத்தலகுண்டில் பள்ளிப்படிப்பையும், மதுரையில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றார். அந்த சூழலில்தான் இலக்கியத்திலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சுதந்திர சங்கு என்ற பத்திரிகையில் விடுதலை தொடர்பான கட்டுரைகளை எழுத துவங்கினார். மெல்ல மெல்ல மணிக்கொடி இதழின் மூலம் தீவிர இலக்கியத்திற்குள் ஈடுபடலானார். 1937-ல் சென்னைக்கு இடம்பெயர்ந்த அவர் 1947 முதல் 1953 வரை தினமணி கதிரில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். ஒருபுறம் பத்திரிகை துறையிலும் மறுபுறம் எழுத்துப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரது புகழ்பெற்ற குறுநாவலான வாடிவாசல் 1947-ல் எழுதப்பட்டது. ஜல்லிக்கட்டை களமாக கொண்ட இந்நாவல் மறைமுகமாக விடுதலையின் வேட்கையை பிரதிபலிக்கும் விதமாக எழுதி இருப்பார் சி.சு.செல்லப்பா. வெறும் 70 பக்கங்கள் மட்டும் கொண்ட வாடிவாசல், இன்றளவும் தமிழ் இலக்கியத்தின் க்ளாசிக் நாவல்களில் ஒன்றாக விளங்குகிறது. “உழுது போட்ட நிலம் போன்ற கிழவனின் முகம், சீனி கிழங்கு போன்ற கொம்புகள், கொசு அமர்ராபுல காள மேல அமர்னுமேலே” போன்ற அவரது வர்ணனைகள் காலம் கடந்தும் நினைவுகூரப்படுகிறது. உலக இலக்கியத்தில் ஹெமிங்வே எழுதிய கிழவனும், கடலும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையோ அதற்கு இணையாக தமிழில் கொண்டாடப்படும் கதையாக வாடிவாசல் திகழ்கிறது.

சி.சு.செல்லப்பா என்றதும் நினைவுக்கு வருவது அவர் உருவாக்கிய எழுத்து சிற்றிதழ் தான். இன்றளவும் சிற்றிதழ்களின் முன்னோடியாக எழுத்து பார்க்கப்படுகிறது. அட்டைப்படத்திலேயே பொருளடக்கம் துவங்கி விடும். தீவிர இலக்கியம் மட்டுமே அதன் பேசுபொருள். கறார் விமர்சனத்தன்மை அதன் முக்கியமான அம்சம். ஏராளமான இளம் எழுத்தாளர்களை அவர் எழுத்து சிற்றிதழ் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளார். வெங்கட் சாமிநாதன், பிரமிள், நா.முத்துசாமி போன்றவர்கள் அவரால் ஊக்கம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரஸாவின் பொம்மை, மணல் வீடு போன்ற சிறுகதை தொகுதிகளும், ஜீவனாம்சம், சுதந்திர தாகம் போன்ற நாவல்களையும், முறைப்பெண் என்ற நாடகத்தையும், மாற்று இதயம் என்ற கவிதை தொகுதியையும், இன்று நீ இருந்தால் என்ற குறுங்காப்பியத்தையும் அவர் எழுதியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்து சிற்றிதழ் என்பதே அவரது ஆகச்சிறந்த பங்களிப்பு ஆகும்.

1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி காலமானார் சி.சு.செல்லப்பா. அவரது மறைவுக்குப் பிறகு 2001-ம் ஆண்டு சி.சு.செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

அழுக்கேறிய வேட்டி, ஒடிசலான தேகம், உருவத்திற்கு மீறிய அளவில் பொருந்தா பெரிய சட்டை, அமைதியான முகம் இதுதான் சி.சு.செல்லப்பா. அந்த ஒற்றைநாடி சரீரத்திற்குள் தான் தமிழின் தீராநதி ஓடிக்கொண்டிருந்தது, எழுத்தாக…

 

 

 

 

Exit mobile version