உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தோடு தமிழியக்கம் என்ற புதிய அமைப்பு துவங்கப்பட இருக்கிறது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விசுவநாதனை நிறுவனராகவும், தலைவராகவும் கொண்டு துவக்கப்பட உள்ளது இந்த தமிழியக்கம். வரும் 15-ந் தேதி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இதற்கான துவக்க விழா நடைபெற உள்ளது. 7 அமர்வுகளாக இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு நடைபெறும் முதல் அமர்வில் இதில் மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி மற்றும் கயானா நாட்டின் அமைச்சர் வீராசாமி நாகமுத்து சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். முதன்மை விருந்தினராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தீந்தமிழ் திறவுகோல் என்ற நூலையும் வெளியிடுகிறார். தமிழியக்கத்தின் இணையதளத்தை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைக்கிறார்.
இரண்டாவது அமர்வாக பாராட்டரங்கம் நடைபெறுகிறது. மூத்த தமிழ்ச் சான்றோர்களை மரியாதை செய்யும் வகையில் இந்த அமர்வு உள்ளது. இதில் பாடலாசிரியர் வைரமுத்து, பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் பாராட்டுரை வழங்குகின்றனர்.
மூன்றாவது அமர்வாக தேனிசை செல்லப்பா வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி அரங்கேறுகிறது. இதனைத் தொடர்ந்து நான்காவது அமர்வாக துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜெயந்திமாலா சுரேஷ் தலைமையில் உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 5-வது அமர்வாக தமிழ்நாட்டின் ஊடகத்துறையினர் கலந்து கொள்ளும் அமர்வு முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு பெயர் மாற்றப் பொன்விழா ஆறாவது அமர்வாக விவாதிக்கப்படுகிறது. பெற்றவளுக்கே பெயர் சூட்டிய பேரறிஞர் என்ற தலைப்பில் தமிழ் ஆர்வலர்கள் இதில் பேச உள்ளனர். 7-வது மற்றும் இறுதி அமர்வாக தமிழியக்கத்தின் நோக்கம் இலக்கினை நிறுவனர் விசுவநாதன் விளக்குகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.