தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மதுரை தனக்கன்குளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக்கூறும் வகையில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பாஸ்கரன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடி அசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, காற்றாலையின் மூலமாக கிடைக்கக்கூடிய மின்சாரம் குறிப்பிட்ட அளவிற்கு கிடைக்காததால், சில இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டதாக கூறினார். தற்போது, அந்தநிலை சரிசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் மின்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.