பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் 70% க்கு மேல் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் துவக்கி வைத்தார். மேலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்து காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றும் பாடப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், மாநகரில் தினமும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், முகக்கவசம் அணிதலையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அவசியமின்றி வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்து சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்ற அவர், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் முகக்கவசம் அணியாமல் வந்து அவர்களுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரும்பாலான மக்கள் நோய் தொற்று பரவலின் ஆபத்தை உணர்ந்து முகக்கவசம் அணியத் துவங்கியுள்ளதாகவும்,இதேபோல கொரோனா நோய் தொற்றை ஒழிக்க காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அரசு வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் 70% க்கு மேல் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், இரவு ஊரடங்கின் முதல் நாளில் தேவையின்றி வெளியில் சுற்றிய 20 வாகனங்களும் இரண்டாவது நாளில் 30 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும், இது தொடருமாயின் சம்மந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், இருசக்கர வாகனங்களில் மட்டுமல்லாமல் பேருந்துகளிலும் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்காணித்து காவல்துறையினர் பேருந்துகளில் ஏறி அவர்களிடம் முகக்கவசம் அணிய அறிவுறுத்துவதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, இணை ஆணையாளர் எழிலரசன், இந்திய மருத்துவத்துறை இணை இயக்குநர் அசோகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.