அமெரிக்காவில், ஹெச்-4 விசாவை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதால், 3 மாதத்தில் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு அரசு ஹெச்-1 B விசா வழங்கி வருகிறது. அவ்வாறு பணிபுரியும் நபர்களின் மனைவியோ அல்லது கணவரோ, அமெரிக்கா சென்று பணிபுரிய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது.
இதனை இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டினர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதால் ஹெச்-4 விசா வழங்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஆஜரான உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரி, ஹெச்-4 விசா மூலம் வழங்கப்பட்ட பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும் என்றார். இதுதொடர்பான புதிய சட்டம் 3 மாதத்திற்குள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹெச்-4 விசாவின் கீழ் அமெரிக்காவில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள். ஹெச்-4 விசாவை ரத்து செய்வதற்கான புதிய சட்டம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 3 மாதத்தில் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அந்த வகையில் ஹெச்-4 விசா ரத்து விவகாரம் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை பீதியடைய செய்துள்ளது