அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள் உள்ளிட்டவைகளை அனுமதியின்றி வைக்கும், தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விதியை மீறி செயல்படுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதியை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது விளம்பர பலகை ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உரிமம் பெறாத விளம்பர நிறுவனங்களுக்கு, கட்டிடத்தின் உரிமையாளர்கள் விளம்பர பலகை வைக்க அனுமதிக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.