தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த போது, தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சிக்கு, சென்னை பி.எஸ்.என்.எல்.லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2007 ஆம் ஆண்டில் சென்னை BSNL-ன் பொது மேலாளராக இருந்த கே.பி.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் ஆகிய 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தயாநிதி மாறன் அரசுக்கு 1,78,71,391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளார் என குற்றபத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்குமாறு 7 பேருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபட்டது.
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என நீதிபதி அறிவித்தார்.
அதன்படி மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாட்சி விசாரணை தொடங்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாட்சிகளை பின்னர் ஆஜர்படுத்துவதாக கூறினார்.
இதனையடுத்து, சாட்சிகள் விசாரணையை வரும் 6 ஆம் தேதி தள்ளிவைப்பதாக நீதிபதி வசந்தி உத்தரவிட்டுள்ளார்.