கோவாவுக்கு புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாரதிய ஜனதா தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோவாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமானதையடுத்து, மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.
இதனிடையே கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சித் தலைவர் தடீபக் தாவாபிகர், பனாஜியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்றும் மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து பாஜக மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்நிலையில் நாளை பனாஜியில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. முதலமைச்சர் பதவிக்கு சபாநாயகர் பிரமோத் சாவந்த், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, பொதுப் பணித் துறை அமைச்சர் சுதின் தவாலிகர் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.