கேரள வெள்ள பாதிப்புக்கு அதிமுக எம்எல்ஏக்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளனர்.
கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்து மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
அவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து உதவிகள் குவிந்தன. குறிப்பாக தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர்.
அதன்படி ஒரு கோடியே 13 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை சபாநாயகர் தனபால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், சட்டப்பேரவை செயலாளர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.