தமிழக டாக்டர் ஜி.வெங்கடசாமியின் நூற்றாண்டு விழாவை, டூடுள் வடிவத்தில் வெளியிட்டுக் கூகுள் கொண்டாடுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள வடமலாபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் டாக்டர் ஜி.வெங்கடசாமி . மருத்துவரான இவரைத்தான் கூகுள் பெருமைபடுத்தியுள்ளது. ஊரில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் நள்ளிரவில் அக்கம் பக்கத்து வீடுகளில் திடீர் திடீர் என்று இளம் தாய்மார்கள் பிரசவ நேரத்தில் எழுப்பும் மரண ஓலம் சிறுவனாக இருந்த அவரை உலுக்கி எடுத்தது. அதனாலேயே மகப்பேறு மருத்துவர் ஆனார். ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றினார்.
இடையில் முடக்குவாதம் தாக்கியதால், அவரது கைவிரல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் கண் மருத்துவம் பயில முடிவு செய்தார். கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார். தானாகவே பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொண்டு, திருகிக் கொண்டிருந்த விரல்களுக்குக் கடுமையான பயிற்சியளித்து, கண் அறுவை சிகிச்சை நுட்பங்களில் தன்னை மேம்படுத்திக் கொண்டார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.
ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள இவர்தான் தமிழகத்தில் அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கினார். இன்றளவும் அனைத்து அரவிவித் மருத்துவமனையிலும் இலவச பிரிவு இருக்கிறது.
தற்போதும் அரவிந்த் மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் 40 லட்சம் கண் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆறு லட்சம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உலகில் தயாராகும் உள்விழி லென்ஸில் சுமார் 10 சதவீதத்தை ‘அரவிந்த் ஆரோ லேப்’ உற்பத்தி செய்கிறது என்பது கூடுதல் தகவல். இது போன்ற காரணங்கள் தான் டாக்டர் வெங்டசாமியை கூகுள் கொண்டாட காரணமாக இருக்கின்றன.
இந்த டூடுள் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தெரிகிறது