காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான தகவலை நடிகை திவ்யா ஸ்பந்தனா மறுத்துள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் #ChorPMChupHai என்ற ஹேஷ்டேக் கீழ் திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்தப் படத்தில் பிரதமர் மோடி அவரது மெழுகுச் சிலையின் நெற்றியில் ‘சோர்’ (இந்தியில் இந்த வார்த்தை திருடனைக் குறிக்கும்) என்று எழுதுவது போல் உருவகப்படுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து லக்னோவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் அளித்த புகாரில் உ.பி., போலீஸார் திவ்யா ஸ்பந்தனா மீது ஐடி சட்டப்பிரிவு 67, சட்டப்பிரிவு 124-ஏவின் கீழ் தேசத் துரோக வழக்கு ஆகியவற்றை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தான் திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் என்ற வரி நீக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து , அவர் கட்சியை விட்டு விலகியதாக செய்திகள் பரவின.
ஆனால் இத்தகவலை திவ்யா ஸ்பந்தனா மறுத்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தகவல்கள் அழிந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் தான் விடுமுறையில் இருப்பதாகவும் விரைவில் பணிக்குத் திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.