“கம்பிகளின் கண்கள்” – புழல் சிறைக்குள் இதுவரை புலப்படாத விஷயங்கள்!

“கம்பிகளின் கண்கள்” என்ற தலைப்பில் புழல் சிறைக்குள் இதுவரை புலப்படாத விஷயங்கள் குறித்து குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகைகள் கவுதமி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், டாக்டர். கமலா செல்வராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சிறைச்சாலைகளின் நேர்மை குறித்து, இந்த குறும் படத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டு, படத்தை இயக்கிய திருநங்கை அப்சரா ரெட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். உலகத்தில் அதிகளவில் உள்ள சிறைவாசிகள் பட்டியலில், 24 லட்சம் கைதிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 3 லட்சம் கைதிகளுடன் இந்தியா 5வது இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சட்டத்திற்கு உட்பட்டு தமிழக போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும்,
இந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறை 363 குழந்தைகளை மீட்டு இருக்கிறது என்றும் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகத் தமிழக காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் பெருமையோடு கூறினார்.

பெண்கள் பாதுகாப்புக்காக உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள 109 எண்ணில் அழைக்கலாம் என்றும், அதைப்போல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு 1098 என்ற எண்ணில் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

Exit mobile version