கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ முல்லக்கல். இவர், தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று பிராங்கோ மறுத்து வந்தார்.
இதனிடையே புகார் அளித்து 70 நாட்கள் ஆகியும் பேராயர் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி கன்னியாஸ்திரிகள் 5 பேர் கடந்த 14 நாட்களாகப் போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து , விசாரணைக்கு ஆஜராகக் கோரி பேராயர் பிராங்கோவுக்கு கேரளப் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதை தொடர்ந்து , பிராங்கோ தனது பேராயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கேரளா திரும்பினார் .
கடந்த 3 நாட்களாக பேராயர் பிராங்கோவிடம் திருப்புனித்துராவில் உள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் வைத்து விசாரனை நடைபெற்றது.
இந்த நிலையில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய வரலாற்றிலேயே பேராயர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவது இது முதல் முறை என போலீசார் தெரிவித்துள்ளனர்.