எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி , எம்.எல்.ஏக்கள் பலர் வழக்கறிஞர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அதி முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் மனுதாரர்கள் அல்லது எதிர்மனுதாரர்கள், இவர்களை வழக்கறிஞர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, ஒரு சார்பு நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட பலர் பெரு நிறுவனங்களின் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் யாருக்கு வாதாடுகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக அரசை வளைக்க முடியும் என்று புகார் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அஸ்வினி குமார் என்பவர் எம்.பிக்களாக உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்ற பணிகளை செய்வதால், அவர்கள் மக்களுக்காக முழு நேரமும் பணியாற்ற முடியவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அஸ்வினி குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.