எம்ஜிஆர் சிலைக்கு வாரம் இருமுறை மாலை அணிவிக்கும் போஸ்டர் ஒட்டும் ஏழைத் தொழிலாளி

திண்டுக்கல்லை சேர்ந்த போஸ்டர் ஒட்டும் ஏழைத் தொழிலாளி ஒருவர் எம்ஜிஆர் சிலைக்கு வாரம் இருமுறை மாலை அணிவித்து தனது அன்பினை வெளிப்படுத்தி வருகிறார். எம்ஜிஆரின் நினைவுகளோடு வாழ்ந்து வரும் அவரது இந்தச் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியு வருகிறது.

திண்டுக்கல் ஒய்.எம்,ஆர் பகுதியைச் சேர்ந்த நடராஜன், தனது 20 வயது முதல் போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். 65 வயதை கடந்துள்ள அவர்,1964 -ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளி வந்த எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டத் தொடங்க, இன்றளவும் அதே தொழிலை செய்து வருகிறார்.

அதிகளவில் எம்.ஜி.ஆரின் படங்களை பார்க்க தொடங்கிய நடராஜன், ஒரு கட்டத்தில் அவரின் நடிப்பு,சமுதாய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர ரசிகராக மாறினார்.

அதன் பின்னர் தனது கழுத்தில் எம்.ஜி.ஆரின் டாலரை கட்டிக் கொண்டு வலம் வர ஆரம்பித்தார்.எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர், சினிமா போஸ்டர்களை ஒட்டுவதை தவிர்த்தார். பிழைப்பிற்காக அரசியல் கட்சி போஸ்டர்கள்,கண்டன போஸ்டர்கள், வார,மாத பத்திரிகை போஸ்டர்களை ஒட்டி அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.

திண்டுக்கல் பிரஸ் கிளப்பின் மாடிப்படிக்கு கீழ் தங்கியுள்ள நடராஜன், தான் உறங்கும் அறை முழுவதும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒட்டி வைத்துள்ளார். மேலும் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், எம்.ஜி.ஆரின் பிறந்த தினம்,நினைவு தினத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் சிலையைக் கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு செல்ல நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காததால், எம்.ஜி.ஆர் சிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் மீது கொண்டுள்ள அன்பினால், கூலித் தொழிலாளி போஸ்டர் நடராஜனின் இந்த செயல் திண்டுக்கல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version