தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலராக வெளிவந்த திரைப்படங்களில் முக்கியமானது ‘ஆரண்ய காண்டம்’. திரைப்படம் என்பது, வெகுவாக காட்சிகளாலும், குறைவாக வசனங்களாலும் பின்பற்றப்படவேண்டிய ஒன்று என்பது, தமிழ் சினிமாவில் பின்பற்றப்படாத விதிமுறை. ஏனெனில், இங்குத் திரைப்படங்கள் என்பது, வசனங்களால் நிரம்பிய, மிகை நடிப்புகளால் சூழப்பட்ட; வேண்டும் என்றே திருப்பங்கள் புகுத்தப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சம்பிரதாயங்களை உடைத்து, தமிழ் சினிமாவின் புதிய கூறுமொழியாகத் திரைக்கதை என்னும் வஸ்துவை முழுமையாக கைக்கொண்ட ஒரு படமாக வெளிவந்தது ‘ஆரண்ய காண்டம்’.
தியாகராஜன் குமாரராஜா, இப்படத்தை இயக்கியிருந்தார். டாம்பீகமான பேட்டிகளோ, ஆர்ப்பாட்டமான டீசர்களோ, ஆரவாரமான விழாக்களிலோ எங்கும் தலைகாட்டாதவர் தியாகராஜன் குமாரராஜா. “தன்னுடைய திரைப்படம் பேசவேண்டும், கலைஞன் பேசவேண்டிய அவசியம் இல்லை” என்ற கொள்கை உடையவர் அவர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது ‘ஆரண்ய காண்டம்’. அன்றைய காலகட்டத்தில், வசூல் ரீதியாக வெற்றியைக் குவிக்காவிட்டாலும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றது. இப்போது திரும்பிப்பார்த்தால், காலத்தைத் தாண்டிய படைப்பாக, தமிழ் சினிமாவின் தயாரிப்பு என்று, சர்வதேச அரங்கில் மார்தட்டிக்கொள்ள வேண்டிய திரைப்படமாக கலை ரீதியாக மேலெழுந்து நிற்கிறது ‘ஆரண்ய காண்டம்’.
‘ஆரண்ய காண்டம்’ படத்திற்குப் பிறகு, 8 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு, சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் தியாகராஜன் குமாரராஜா. விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
உண்மையான திரை ரசிகர்கள் ஒரு பெரும் விந்தென ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை எதிர்நோக்கி உள்ளனர்.