உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பெட்ரோலிய ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நாகினா சாலையில் உள்ள மோஹித் பெட்ரோலிய-ரசாயன ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. அந்த ஆலையில் இருந்த மீத்தேன் கொதிகலன் ஒன்று பழுதாகி கடந்த சில நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை காலை அந்த கொதிகலனை சரிசெய்ய வெல்டிங் செய்த போது இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் வரை படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலையில் உரிமையாளர் 12 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். ஆனால் உறவினர்கள் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.