உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 2-ந் தேதி முடிவடைகிறது.
இன்னும் 5 வேலைநாட்களே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மிஸ்ரா பதவி வகிக்க முடியும்.
இந்த 5 நாட்களில் பல அதிரடியான வழக்குகளில் அவர் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவை எந்தெந்த வழக்குகள் என்பதை இப்போது பார்ப்போம்…
ஆதார் அட்டைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு மிக முக்கியமான ஒன்று.
ஏனெனில் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் ஆதார் அட்டையை மையப்படுத்தியே உள்ளது. அந்த வழக்கில் தீபக் மிஸ்ரா வழங்கப்போகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 ஆண்டுகால பிரச்னையான ராமஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கிலும் தீபக் மிஸ்ரா அமர்வு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.
சமூகதளத்திலும், அரசியல் மட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கக் கூடிய இந்த வழக்கில் மிஸ்ராவின் தீர்ப்பு அனைத்து தரப்பினரையும் உற்றுநோக்க செய்துள்ளது.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயது வரம்பை உடைய பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கிலும் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
சமீபத்தில் கேரளத்தில் பெய்த கனமழைக்கு காரணம் என இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசுப்பணிகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வு தொடர்பான வழக்கில் 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதனை எதிர்த்து பாஜக மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கிலும் 5 நாட்களுக்குள் தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்க உள்ளார்.
அக்டோபர் 2-ந் தேதியன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் தீபக் மிஸ்ரா ஒருநாள் முன்னதாகவே அக்டோபர் 1-ந் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து விலக உள்ளார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் ஏற்கனவே குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.