இந்திய மருத்துவ கவுன்சில் கலைப்பு- மத்திய அரசு அவசர சட்டம்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் அவசரச் சட்டதிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்படாமல், துறை சார்ந்த நாடாளுமன்ற குழு முன்பு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி அளித்தது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆணையம் தொடங்கும் வரை இந்த பணிகளை மருத்துவ கவுன்சில் கவனிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் மருத்துவச் சேவை மற்றும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Exit mobile version