ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் – கலிஃபோர்னியாவில் அறிமுகம்

உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் , புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் 10 ஆகிய ஸ்மார்ட் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தாண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இதில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 10S, ஐபோன் 10S மேக்ஸ் மற்றும் ஐபோன் 10R என அழைக்கப்படும் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஐபோன் 10S மற்றும் ஐபோன் 10S மேக்ஸ் மாடல்களில் சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபோன்களின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட 40 சதவீதம் குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது.

ஆப்பிள் ஐபோன் 10S மற்றும் 10S மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் 10S விலை இந்திய மதிப்பில் 71,863 ரூபாய் முதல் துவங்குகிறது. ஐபோன் 10S மேக்ஸ் விலை இந்திய மதிப்பில் 79,056 ரூபாய் முதல் துவங்குகிறது. ஆப்பிள் ஐபோன் 10R மாடலின் விலை இந்திய மதிப்பில் 53,860 ரூபாய் முதல் துவங்குகிறது.

இதேபோல், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் இந்த புதிய வாட்ச் அறிமுகமாகியுள்ளது.

Exit mobile version