உலகில் எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். தமிழகத்தில் இந்த திட்டத்தை, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைத்து புதிய காப்பீட்டு திட்டம் செயல்பட உள்ளது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த இந்தத் திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான முன் அனுமதியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடியே 47 லட்சம் பேர், ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணமில்லா மருத்துவ சேவையை பெற முடியும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 911 மருத்துவமனைகளில் தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்பட இருப்பதாகவும், இந்த திட்டத்தில் ஆயிரத்து 450 சிகிச்சை முறைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை மூலமாகவே, புதிய திட்டத்திற்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். காப்பீட்டு திட்டத்தில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருந்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துடன் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.