ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

18வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88 புள்ளி 06 மீட்டர் தூரம் வீசி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த தருண் 48 புள்ளி 96 வினாடியில், பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் 6 புள்ளி 51 மீட்டர் தூரம் தாண்டி, வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில், இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூயிங்கை, பி.வி.சிந்து எதிர்கொள்கிறார். இதுவரை 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலத்துடன் 41 பதக்கங்கள் வென்று, பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.

Exit mobile version