திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 5000 இளைஞர்கள் சைக்கிளில் பேரணியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த சைக்கிள் பேரணி பிரச்சாரத்தை தனக்கன்குளத்தில் இருந்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் அமைப்பு செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், ராஜலட்சுமி, பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்து பேசினார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., வரவேற்று பேசினார்.
பேரணியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, தங்கமணி, அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் அமைப்பு செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதைதொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 5000 இளைஞர்கள் சைக்கிள் பேரணி சென்று திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தனர்.
தனக்கன்குளத்தில் இருந்து கிளம்பிய சைக்கிள் பேரணி திருநகர், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், கோவில் சன்னதி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெயவிலாஸ் பாலம், சிந்தாமணி, மெயின் ரோடு, விரகனூர் புளியங்குடி வழியாக சிலைமான் சென்றடைந்தது.
இந்த சைக்கிள் பேரணியை வழி நெடுக சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.