அதிமுக-வினர் எப்போதும் விலைபோக மாட்டார்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உரையாற்றினார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் நிறைவேற்றி வருவதாக புகழாரம் சூட்டினார்.
1962-ல் சீனா படையெடுப்பின்போது, அப்போதைய பிரதமர் நேரு, நிதி தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், உடனடியாக 75 ஆயிரம் ரூபாயை வாரிக்கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர் என்றும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆரை திராவிட கர்ணன் என ஆங்கில நாளேடு புகழ்ந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
எங்கள் தங்கம் படத்தை தனது நண்பருக்காக நடித்துக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அந்தப் படத்துக்கு வாலி பாடல் எழுதினார். நான் அளவோடு ரசிப்பவன் என முதல் வரியை வாலி எழுதிவிட்டு அடுத்த வரி என்ன எழுதலாம் என சிந்திக்கும்போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என கருணாநிதி அடுத்த வரியை எடுத்துச் சொன்னதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கருணாநிதியை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக்கினார். ஆனால் முதலமைச்சரானவுடன் கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு பல தொல்லைகள் கொடுத்தார். சினிமாவில் இருந்தும் எம்.ஜி.ஆரை ஓரம் கட்டும் நோக்கத்தோடு, தனது மகன் மு.க. முத்துவை, பிள்ளையோ பிள்ளை படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் மக்கள் அதை ரசிக்கவில்லை. மு.க. முத்து அரசியலுக்கு வந்திருந்தால், இப்போது ஸ்டாலினுக்கு பதவி கிடைத்திருக்காது. தந்தைக்கும், தனயனுக்கும் பதவி கொடுத்தவர்தான் எம்.ஜி.ஆர் என்று தம்பிதுரை தெரிவித்தார்.
அண்ணாவின் கொள்கைகள் அண்ணாயிசம் என விளக்கம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அண்ணாவின் மாநில சுயாட்சி முழக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை பல நேரங்களில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு பேரரசு, மாநில அரசு பேருக்கு அரசு என அண்ணா சொன்னதை, எம்.ஜி.ஆர். நினைவுகூர்ந்ததை தம்பிதுரை எடுத்துரைத்தார்.
வறுமையின் கொடுமையை உணர்ந்து இருந்ததால் தான் மத்திய அரசு கைவிரித்த போதும் சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் உறுதிபட கொண்டு வந்ததை தம்பிதுரை சுட்டிக்காட்டினார். தமிழ் உணர்வு, திராவிட உணர்வு ஆகியவற்றுடன், புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சி மற்றும் ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக-வினர் யாரும் விலை போகமாட்டார்கள் என்றும் தம்பிதுரை உறுதிபட கூறினார்.