முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, வெற்றி மேல் வெற்றி பெறுவோம் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அண்ணாவின் 30 வருட பொது வாழ்வு நாட்டின் அரசியல் போக்கை மாற்றியதாக கூறியுள்ளனர்.
மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன்முதலாக அண்ணா நிகழ்த்திக்காட்டினார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகவே முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் சிறப்பான ஆட்சிகளை நடத்திக்காட்ட முடிந்தது என்று இருவரும் கூறியுள்ளனர்.
தமிழக முன்னேற்றத்துக்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்தளித்த பாதையில் அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, அண்ணா பிறந்தநாளில் தெரிவித்துக்கொள்வதாக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
அண்ணாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் அஇஅதிமுக மக்கள் தொண்டாற்ற உறுதியேற்று, அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று, அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது அவசியம் என்பதை தொண்டர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருப்பதாகவும் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.