அரபு நாடுகளின் நடுவே உள்ள குட்டி நாடு இஸ்ரேல். தொழில்நுட்பத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெயர் போன நாடு. சர்ச்சைகளுக்கும். இந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இவரது மனைவி சாரா.
ஹோட்டல்களில் உணவு சாப்பிடுவது என்றால் இவருக்கு உயிர். அரசு செலவில் வீட்டிலேயே சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவரோ அரசு ஊழியர் ஒருவருடன் சொகுசு விடுதிகளுக்கு சென்று அரசு செலவில் உணவுகளை வெளுத்துக் கட்டியுள்ளார்.
எவ்வளவு தொகைக்கு சாப்பிட்டுள்ளார் தெரியுமா? சுமார் 1 லட்சம் டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 74 லட்சம். இதற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று ஜெருசலத்தில் உள்ள நீதிமன்றத்தில் சாரா ஆஜர் ஆனார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டை சாரா மறுத்து வருகிறார்.
சாரா ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்த பணியாளரை துன்புறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நீதிமன்றத்திற்கே சென்றது.
2017 ஆம் ஆண்டு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சாரா தனது கணவரும் பிரதமருமான நெதன்யாகுவை காரில் இருந்து உதைத்து வெளியே தள்ளியதாக, ஒரு பத்திரிக்கையாளர் செய்தி வெளியிட்டார். பின்னர் அது பொய்யான செய்தி என நீதிமன்றத்தில் நிரூபித்தார் பிரதமர் நெதன்யாகு.
Discussion about this post