ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் – 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி வன்முறையாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மேலும், சிபிஐ துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முழுப் பின்னணி விவரங்களை முழுமையாக விசாரித்து  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விசாரணையை 4 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில், போராட்டம்  தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது  கொலை மிரட்டல், கொலை முயற்சி, பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட  15 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Exit mobile version