விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல் – வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ராக்கெட்

விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி சாதனை படைத்துள்ளது. மனிதகுல சாதனைகளில் அடுத்தகட்ட அறிவியல் பாய்ச்சலாக பார்க்கப்படும் இதனை நிகழ்த்தி காண்பித்துள்ளது, பால்கன் 9 என்ற ராக்கெட்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பேஸ் எக்ஸ். வர்த்தக ரீதியில் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் பெரும்பாலான செயற்கைக் கோள்களையும், உலக நாடுகளின் செயற்கை கோள்களையும் ஸ்பேஸ் எக்ஸ் தன்னுடைய ராக்கெட்டுக்கள் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

இதுவரை செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுக்கள் அவற்றை நிலைநிறுத்திய பிறகு விண்ணில் சிதறி விடும் அல்லது கடலில் விழுந்து விடும். அந்த ராக்கெட்டுக்களுக்காக செலவிட்ட தொகை அவ்வளவு தான். இதனை மாற்றும் வகையில் மீண்டும் பயன்படுத்தத்தக்க ராக்கெட்டுக்களை தயாரிக்கும் பணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

இதன்படி பால்கன் 9 என்ற ராக்கெட்டை வடிவமைத்தது. அமெரிக்காவின் SAOCOM 1A என்ற செயற்கைகோளை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை விண்ணில் சீறிப் பாய்ந்தது. புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்திய பின்னர், பால்கன் 9 ராக்கெட்டானது அதில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு எரிபொருள் கருவியின் வாயிலாக திசைமாற்றம் செய்யப்பட்டு பூமியை நோக்கி திருப்பப்பட்டது.

திட்டமிட்டப்படி கலிபோர்னியா மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் தீப்பிழம்புகளை கக்கியபடி பாதுகாப்பாக தரையிறங்கியது. கிட்டத்தட்ட வானில் நிகழ்ந்த அற்புதம் என அறிவியலாளர்கள் இந்நிகழ்வை வர்ணிக்கின்றனர்.

இனி முதற்கொண்டு பேருந்துகளை போல், ரயில்களை போல் வானில் சென்றுவரத்தக்க ஒரு வாகனம் போல் மாறிவிட்டது ராக்கெட்டுக்கள். இதனை சாத்தியப்படுத்தி காட்டியிருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தான், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version