மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி ?

வாராக்கடன்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார். சுதந்திரம் அடைந்தது முதல் 2008ஆம் ஆண்டு வரையில் 18 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் 52 லட்சம் கோடி ரூபாயில் வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, வாங்குகிற கடன்களை திரும்ப செலுத்த மாட்டார்கள் என்று நன்றாக தெரிந்தும்கூட, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட சிலருக்கு கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டதாகவும் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், வாராக்கடனுக்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்றால், அந்த கடனை வசூலிக்காமல், மீண்டும் அந்த நபர்களுக்கே பாஜக அரசு கடன் வழங்கியது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், பாஜக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட கடன்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version