மொழிபெயர்ப்பு மேதைகள்..

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று பாடினார் மகாகவி சுப்ரமணிய பாரதியார். அப்படி பிற மொழியில் இருந்து தமிழுக்கு அறிவுப் புதையல்களை கொண்டு வந்தவர்கள் பற்றியும், தமிழில் இருந்து பிறமொழிக்கு அறிவுப் பொக்கிஷங்களை அடையாளம் காட்டியவர்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்…

பரந்து விரிந்த தமிழ் இலக்கிய பரப்பில் மொழிமாற்றம் என்ற அளவைத் தாண்டி மூலத்தையும் விஞ்சிய படைப்பாக நிற்பது கம்பராமாயணம். வடமொழியில் இருந்த ராமாயணத்தை தமிழுக்கு தக்கவாறு மொழிமாற்றம் செய்து தமது அற்புதமான சொல்லாற்றலால் கம்பராமாயணத்தை காலத்தை தாண்டிய படைப்பாக மாற்றிய வகையில் கம்பர் முதலாவது ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆவார். கம்பராமாயணத்தின் காலம் 10-ம் நூற்றாண்டு ஆகும்.

1546-ம் ஆண்டு இந்தியா வந்த போர்ச்சுகீசிய மொழியியல் அறிஞர் ஹென்றிக் ஹென்றிக்ஸ். தமிழை நன்கு கற்று தேர்ந்த அவர், கிறிஸ்துவ மத பாடல்களை தம்பிரான் வணக்கம் என்ற பெயரில் 1578-ம் ஆண்டு அச்சிட்டார். அச்சுப்பதிப்பு கண்ட முதலாவது இந்திய மொழி என்ற பெருமை தமிழுக்கு இதன்மூலம் கிடைத்தது. ஆங்கிலத்தில் இருந்த கிறிஸ்துவ கதைகளை கிரிசித்தியானி வணக்கம் என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்தார். இத்தகைய முயற்சிகளால் தமிழ் அச்சு உலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் ஹென்றிக் ஹென்றிக்ஸ்.

1606-ல் இந்தியா வந்த இத்தாலிய பாதிரியாரான ராபர்ட்டோ டி நோபிள் மதுரையில் தமது தமிழ் பணியை துவக்கினார். தத்துவ போதகர் என்று பெயர் சூட்டிக்கொண்ட அவர்தான், கிறிஸ்துவ வழிபாட்டு முறைகளை தமிழில் அறிமுகப்படுத்தியவர். குரு, அருள், பூசை, வேதம் போன்ற சொற்களை கிறிஸ்துவ மதத்திற்கு கொண்டு சென்றார். மயிலாப்பூரில் உயிர்நீத்த அவரது மொழிமாற்ற பணிகள் இன்றளவும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

போர்ச்சுகீஸ் தந்த மற்றொரு மொழியியில் அறிஞர் தான் அந்தம் தெ புரவென்சா. 1679-ம் ஆண்டு அம்பலக்காடு என்ற இடத்தில் இவர் பதிப்பித்த தமிழ் – போர்ச்சுகீஸ் அகராதி வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாகவே ஹென்றிக் ஹென்றிக்ஸ் இதுபோன்றதொரு அகராதியை பதிப்பித்து இருந்தாலும் அது கிடைக்காத காரணத்தால், இதுவே முதன்மையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி தந்த அறிவு ஆசான் பார்த்தலோமிய ஜீகன்பால்கு. 1708-ம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடிக்கு வந்த அவர் பிற ஐரோப்பியர்களை போலவே கிறிஸ்தவ மத போதகராகவே துவக்கத்தில் இருந்தார். இன்று நம் கைகளில் புழங்கும் புதிய ஏற்பாடு அவர் பதிப்பித்ததே. ஆனால் தமிழ்மீது பற்று கொண்டு தமிழ் இலக்கண நூல்களை பதிப்பித்தார். கொன்றை வேந்தன், உலக நீதி போன்ற நூல்களை பதிப்பித்ததோடு, ஐரோப்பிய மொழிகளுக்கும் கொண்டு போய் சேர்த்தார்.

கான்ஸ்டைன்டன் ஜோசப் பெஸ்கி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது, ஆனால் வீரமாமுனிவர் என்று சொன்னால் பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆம், இத்தாலியில் பிறந்து இந்தியா வந்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய மேதை தான் வீரமாமுனிவர். திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். இதுவே உலக மொழிகளில் திருக்குறள் சென்று சேர காரணமாகும். அதுமட்டுமல்லாது தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி போன்றவற்றை ஆங்கிலத்திற்கு கொண்டு சேர்த்தார். இவற்றுக்கு சிகரமாக தமிழ் இலக்கண நூலான சதுரகராதியை எழுதினார். அதன்பிறகு தமிழில் ஒற்று எழுத்துக்கள் எழுத ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக க், ச், போன்ற எழுத்துக்கள் தமிழில் கிடையாது. அதனை வரைமுறைப்படுத்தியவர் வீரமாமுனிவர். கிறிஸ்துவின் பூவுலக தந்தையான புனித ஜோசப் குறித்து இவர் எழுதிய தேம்பாவணி அதனுடைய இசைத்தன்மைக்காக போற்றப்படுகிறது. பரமார்த்த குரு கதைகள் உள்ளிட்ட பல படைப்புகள் வீரமாமுனிவரின் கைவண்ணமே.

இவர்கள் வழிவந்த எத்தனை எத்தனையோ எழுத்தாளர்கள் தமிழில் இருந்து பிறமொழிக்கும், பிறமொழிகளில் இருந்து தமிழக்கும் படைப்புகளை இடமாற்றம் செய்துள்ளனர். இன்று நாம் வாசித்து மகிழும் பல படைப்புகள் அவர்களின் உழைப்பில் மிளர்ந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

 

 

Exit mobile version