முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் மதுரையில் ஆலோசனை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்வது குறித்து, முதலமைச்சர்,துணை முதலமைச்சர் தலைமையில் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் ஆகஸ்டு 2-ம் தேதி காலமானார். திருவாரூர் தொகுதி உறுப்பினரும், திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதி ஆகஸ்டு 7-ம் தேதி மரணம் அடைந்தார். எனவே, இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

5 மாநில தேர்தலின் போது, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், உதயகுமார் உள்பட 15 அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் பணிக் குழுக்களை அமைப்பது, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்து. ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இடைத்தேர்தலை ஒட்டி திருப்பரங்குன்றத்தில் 11ம் தேதி அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version