மருமகளுக்கு சிறுநீரகம் தானம் அளித்த மாமியார்- நெகிழ்ச்சி சம்பவம்

 

பெற்றத் தாயே மறுத்துவிட்ட நிலையில், தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமளித்துள்ளார் மாமியார் ஒருவர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் வசித்து வருபவர் கனி தேவி . இவர்தான் தனது 32 வயது மருமகள் சோனிகாவுக்கு ஒரு சிறுநீரகத்தை தானமளித்துள்ளார்.

சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், டில்லி மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய சோனிகாவை காப்பாற்ற யாராவது சிறுநீரக தானம் செய்தால் தான் முடியும் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

ஆனால் . சோனிகாவின் தாய், தந்தை, சகோதரன் என யாருமே தங்களது சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வரவில்லை. அதே சமயம் சோனிகாவின் மாமியார் கனி தேவி தனது சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்தார்.

இதையடுத்து செப்டம்பர் 13ம் தேதி இருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. கனிதேவியின் சிறுநீரகம் வெற்றிகரமாக சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. சோனிகா தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். தனக்கு மறுவாழ்வு அளித்த மாமியாருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக சோனிகா கூறியுள்ளார்.

Exit mobile version