"பொதுவுடமை சிந்தனை பாடல்களை தனது திரைப்படங்களில் இடம்பெறச் செய்தவர் எம்ஜிஆர்"

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாக, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் தலைமையுரை ஆற்றிய அவர், எம்ஜிஆரின் சிறப்பியல்புகள், மனித நேய பண்புகளை நினைவு கூர்ந்தார். எம்ஜிஆர் வழியில் சிறப்பான ஆட்சியை அளித்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் ஜெயலலிதா என்று தனபால் புகழாரம் சூட்டினார். 32 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவை தொடர்ந்து 2வது முறை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தவர் ஜெயலலிதா என்று அவர் குறிப்பிட்டார்.

திரைத்துறை, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தவர் எம்ஜிஆர் என்று புகழாரம் சூட்டிய அவர், எனவே தான் தமது இதயக்கனி எம்ஜிஆர் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்ததை சுட்டிக் காட்டினார்.

மனிதநேயம் மிக்க மகான் எம்ஜிஆர் என்றும், அனைவருக்கும் உரிய மரியாதை வழங்குவதில் அவருக்கு நிகரானவர் யாருமில்லை என்றும் தனபால் வாழ்த்துமடல் வாசித்தார்.

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் முனைப்பு காட்டிய எம்ஜிஆர், கொடைக்கானல் மகளிர் பல்கலைக் கழகத்திற்கு அன்னை தெரசாவின் பெயர் சூட்டியதை குறிப்பிட்டார்.

பொதுவுடமை கொள்கைகளை கொண்ட பாடல்களை தனது திரைப்படங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியவர் எம்ஜிஆர் என்றும், கொள்கை வேறுபாடு இருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவி வழங்கி அழகு பார்த்தவர் என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

சட்ட மேலவை கலைக்கப்பட்ட பிறகு அதன் தலைவராக இருந்த மாபொசி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை தலைவர் பதவியை வழங்கியவர் எம்ஜிஆர் என்று அவர் கூறினார்.

எம்ஜிஆருடன் இரண்டு முறை எம்எல்ஏவாக தான் பணியாற்றியதை நினைவு கூர்ந்த தனபால், தன்மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர் எம்ஜிஆர் என்று தெரிவித்த அவர், அந்த வழியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியுடன் செயல்பட்டதாக தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தமிழக அரசை வழிநடத்தி செல்வதாக கூறிய சபாநாயகர் தனபால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களில் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அதேபோன்று, சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை விமரிசையாக நடத்திய அனைவருக்கும் சபாநாயகர் தனபால் வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version