"நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" – முதலமைச்சர் அறிவிப்பு

எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.13.07 கோடி மதிப்பில் முடிவடைந்த 28 பணிகளை திறந்து வைத்தார். ரூ.31.34 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 14,911 பயனாளிகளுக்கு ரூ.67.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மும்மதங்களும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ்வதாக தெரிவித்தார். மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தந்தது கன்னியாகுமரி மாவட்டம் என அவர் புகழாரம் சூட்டினார். மக்களின் வரிப்பணம், மக்களின் நல்வாழ்க்கைக்கு பயன்பட வேண்டும் என அறிஞர் அண்ணா கூறியதை முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

ஓகி புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசு வழங்கி உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்த 136 பேரின் வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீனவர்களுக்கு ரூ.62 கோடி மதிப்பில் நவீன வயர்லெஸ் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார். புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் பிரச்சனை உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.821 கோடி செலவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இனயம் கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். குளச்சலில் ரூ.96.2 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக விவேகானந்தர் பாறைக்கு செல்ல 2 படகுகள் வாங்கப்படும் என்றும், ரூ.120 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் கிள்ளியூர், திருவட்டாறு புதிய வருவாய் வட்டமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். கோட்டார்- செட்டிகுளம் பகுதியில் ரூ.340 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் 150ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உலகத் தரத்திலான கல்வி வழங்கப்படுவதாகவும், உயர் கல்வி பெறுவோர் பட்டியலில் 48.60 % பெற்று தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

பொய் பேசுவதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் பொருந்தும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளதாகவும், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version