நவராத்திரி.. கதையும், கருத்தும்..

பரந்து விரிந்த பாரத தேசத்தில் எத்தனையோ பழங்குடியின பண்பாடுகள் வழிபாட்டு முறைகளாக பின்பற்றப்பட்டு வந்தாலும் இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்ற ஆறுபெரும் பிரிவுகள் உள்ளன. சிவனை முழுமுதற் தெய்வமாக கொண்டது சைவம், விஷ்ணுவை கண்கண்ட கடவுளாக பின்பற்றுவது வைணவம், சக்தியை கொண்டாடுவது சாக்தம், முருகனை வணங்குவது கௌமாரம், விநாயகரை வழிபடுவது காணபத்யம், சூரியனை போற்றுவது சௌரம். 

ஒருகாலகட்டத்தில் நாம் தாய்வழி சமூகமாக இருந்துள்ளோம். தாய்தெய்வ வழிபாடு நம் தொல்நிலத்தின் அடையாளங்களில் ஒன்று. அதன் நீட்சி தான் சாக்த வழிபாடு. பெண்மையை, பெண் தெய்வங்களை ஆற்றல் மிக்க அன்னை தெய்வங்களாக்கி வழிபடும் முறை. அடுத்த தலைமுறையை உருவாக்கி அளித்த அன்னையை படைப்பாற்றலின் சக்தியாக வழிபட்டுள்ளார்கள். அவளுக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு அவளே காளியாகி வதம் செய்வாள் என்பதையும் நிலைநிறுத்தவே துர்க்கை என்ற அம்சம் பிறந்து வந்தது.

இதற்கும் நவராத்திரிக்கும் என்ன தொடர்பு. இந்தியாவில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. ஒன்று மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி. கோடையை வரவேற்கும் உற்சாக பண்டிகை அது. ராமருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படும் இந்த வசந்த நவராத்திரி வடஇந்தியாவில் பிரபலம். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவது ஸ்ரத்த நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி அல்லது நவராத்திரி. ஆஷாட நவராத்திரி மற்றும் மஹா நவராத்திரி போன்றவை இப்போது பெரும்பாலானோரால் பின்பற்றப்படுவதில்லை. 

நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் பேரன்னையை வழிபடும் நிகழ்வே நவராத்திரி. முதல் மூன்று நாட்கள் துர்க்கை அதாவது பார்வதி தேவிக்காகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்காவும், கடைசி மூன்று நாட்கள் சரசுவதி தேவிக்காகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. பத்தாம் நாள் என்பது தசமி அதாவது விஜயதசமியாக வெற்றித் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்துமத இதிகாசங்களின்படி மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்ய மூன்று தேவியர்களும் ஒன்றிணைந்து துர்க்கை வடிவெடுத்து வென்றதாக கூறப்படுகிறது. 

இந்து மெய்ஞான மரபின் படி நமது உள்ளம் எனும் அரக்கனை வெல்லும் வழிசொல்லும் விழாவாக இதனை பார்க்கலாம். அதாவது முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தி என்னும் நம்முள் உள்ள கெட்ட எண்ணங்களை அழிக்கும் நாளாகவும், அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தி என்னும் நல்ல எண்ணங்களை விதைக்கும் நாளாகவும், கடைசி மூன்று நாட்கள் ஞானசக்தி என்னும் பிறருக்கு உதவி மேன்மையை அடைய வேண்டும் என்னும் தத்துவங்களை விளக்கும் பண்டிகையாக இதனை பொருள் கொள்ளலாம். ஒன்பது நாட்களும் இவ்வாறு கடைபிடித்தால் பத்தாவதுநாள் வாழ்க்கையில் வெற்றி என்பதே விஜயதசமி. 

அறிவுரையை நேரடியாக சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அதனையே ஒரு விளையாட்டாக, பழக்கவழக்கமாக மாற்றிக் கொண்டால் ஏன் என்ற கேள்வி கேட்காமல் பின்பற்றுவோம். அப்படித்தான் நாம் காணும் உயிர்கள் எல்லாவற்றிலும் கடவுளே இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லும் தத்துவமே நவராத்திரியின் போது வைக்கப்படும் கொலு. சிவபெருமானின் மனைவி சிவை. கொலு வைப்பதை சிவை ஜோடிப்பு என்றும் சொல்வார்கள். சக்தியின் வடிவான சிவையே பொம்மையாக அலங்காரம் செய்யப்படுகிறது. அதாவது எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பார்க்க வேண்டும் என்பதே இதன் தாத்பர்யம்.

கொலுவில் மொத்தம் ஒன்பது படிக்கட்டுக்கள் வைக்கப்படும். முதல் படிக்கட்டில் ஓரறிவு உள்ள புல், பூண்டு போன்றவை, இரண்டாவதில் ஈரறிவான நீர்வாழ் உயிரினங்கள், மூன்றாவதில் நிலத்திலும் – நீரிலும் இருக்கும் மூன்றறிவு உயிர்கள், நான்காவதில் நான்கறிவு பிராணிகள், ஐந்தாவது படிக்கட்டில் ஐந்தறிவு கொண்ட விலங்கினங்கள், ஆறாவது படிக்கட்டில் ஆறறிவு கொண்ட மனிதர்கள், ஏழாவது படிக்கட்டில் மனிதர்களாக பிறந்து தெய்வங்களாக உயர்ந்த சித்தர்கள், எட்டாவது படிக்கட்டில் பஞ்சபூதங்களும், ஒன்பதாவது படிக்கட்டில் விநாயகர் மற்றும் மும்மூர்த்திகளான சிவன் – பிரம்மா – விஷ்ணு தத்தமது தேவியருடன் வைக்கப்படுவார்கள். எல்லா உயிரிலும் எல்லையற்ற இறைவனே நிறைந்திருக்கிறான் என்ற தத்துவமும், ஒவ்வொரு படிக்கட்டாக வாழ்வில் உயர வேண்டும் என்ற தத்துவமும் மறைமுகமாக இதில் பொதிந்துள்ளது. 

எல்லா பண்டிகைகளின் பின்னாலும் சில சமூகரீதியான அறிவியல்ரீதியான காரணங்களும் உள்ளன. அந்தவகையில் நவராத்திரி என்பது மழைக்காலத்திற்கு முன்பான பண்டிகை. குறுகிய பகலும், நீண்ட இரவும் கொண்டது. இந்த நீண்ட இரவை எதிர்கொள்ள புரதச்சத்து மிக்க சிறுதானியங்களை உட்கொள்வது அவசியம். தினமும் சுண்டல் சாப்பிடு, பயிறு சாப்பிடு என்று சொன்னால் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதுவே ஒரு விழாவாக இருந்தால் பிரசாதம் என்று நினைத்து சாப்பிடுவார்கள். அதற்காகவே அக்காலகட்டத்தில் நவராத்திரி என்று உருவாக்கி கொலு வைத்து வருபவர்களுக்கு புரதச்சத்து மிக்க சிறுதானியங்களை சுண்டலாக வழங்கும் பழக்கம் இருந்தது. ஒன்பது நாளும், பச்சைப்பயிறு சுண்டல், வெள்ளைக் கொண்டைக்கடலை, மொச்சைப் பயிறு, எள்ளுருண்டை, வெள்ளைக் காராமணி, வெள்ளைப் பட்டாணி, சிவப்புக் காராமணி, பாசிப்பருப்பு சுண்டல், சிவப்புக் கொண்டைக்கடலை போன்றவை கொலுவின் போது வழங்கப்படுகிறது. 

தனிநபர் வழிபாட்டைக் காட்டிலும் கூட்டு வழிபாட்டுக்கு கூடுதல் பலன் உள்ளது என்பது ஒரு நம்பிக்கை. அதனால் தான் நவராத்திரியை சமஷ்டி பூஜையாக அதாவது பலர் ஒன்றுகூடி பாட்டிசைத்து ஒத்த சிந்தனையில் வழிபடும் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரால் துர்க்காஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம் போன்றவை நவராத்திரி நாட்களில் பாடப்படுகிறது. இதுமட்டுமல்லாது கதாகாலட்சேபம், தோல்பாவை கூத்து போன்ற பல நிகழ்த்து கலைகளும் இந்த ஒன்பது நாட்களில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதுதான் இந்த பண்டிகை உணர்த்தும் பாடம். 

 ஒட்டுமொத்த நவராத்திரி பண்டிகையினை ஒற்றை வரியில் சுருக்கிச் சொல்வதென்றால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலான யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் என்ற ஒற்றை வரி போதும். 

Exit mobile version